Tamil

Magazine - Tamil
கொடியாய் அவரில் படர்ந்திட வா!
Monday, Feb 03, 2025

arrow Click to enlarge.

வேத வசனத்தில் வளர்ந்திட வா...

என் அன்பு இளம் உள்ளங்களுக்கு, கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!

ஒரு தேனீ மேஜை கரண்டி அளவு தேன் தயாரிப்பதற்கு 4,200 தடவை மலர்களுக்கு சென்று வருகிறது. ஒரு நாள் ஏறத்தாழ 100 தடவை வெளியே சென்று வருகிறது. ஒவ்வொரு தடவையும் அது சுற்றும் நேரம் 20 நிமிடங்கள். தேனெடுக்கும் பூக்கள் 400. இந்த தகவலை நான் படித்த போது பரிசுத்த வேதாகமம் தேனுக்கும், தேன் கூட்டிற்கும் ஒப்பிடப்பட்டுள்ளது (சங். 19:10, 119:103). கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாக வேதாகமம் எழுதப்பட்டுள்ளது. இரவோடு இரவாக எழுதி மறுநாள் காலையில் வெளியிடப்படும் செய்தித்தாளைப்போல பைபிள் உருவாக்கப்படவில்லை. தமது புத்தகத்தை கடவுள் அவசர அவசரமாய் எழுதவில்லை. ஆனால் இன்றைய நாட்களில் பைபிளைப் படிப்பதிலும், தியானிப்பதிலும் அதிக அவசரப்படுகின்றோம்.

வேதாகமத்தை திரும்பத் திரும்ப படிக்கும் போது, வசனங்களை ஒப்பிடுவது எளிதாகிறது. மேலும் இதைப் படிக்கும் போது இரண்டு பயன்கள் உண்டு. ஒன்று, மிகவும் கடினமான பகுதிகள் தெளிவாகிவிடும். இரண்டு, தவறான உபதேசங்களுக்கு நாம் தப்பித்துக் கொள்ளலாம். எனவே கடவுளுடைய வார்த்தையிலிருந்து கடவுள் விரும்பும் பலனை நாம் பெற வேண்டுமானால், நம் நேரத்தை வேதாகமம் வாசிக்க கட்டாயம் செலவிட வேண்டும். திராட்சைச் செடியின் கொடி படர்ந்திருப்பது போல வேத வசனத்தை பிடித்து ஜெயமாய் வாழ்வோம் என உங்களை வாழ்த்துகிறேன்.

ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறை நாட்களில் இறைவனின் தோட்டத்தில் (திருவள்ளூர்) நடைபெற்ற வாலிபர் முகாமில் 409 வாலிபர்கள், 73 இளம் வாலிபர்கள் மற்றும் தலைவர்கள், போதகர்கள் கலந்துக் கொண்டது மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. அதே நாளில் சாயர்புரத்தில் நடைபெற்ற கிதியோனியர் முகாமில் 304 வாலிபர்கள் பங்கு பெற்று, தங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கும், அவருடைய ஊழியத்திற்கும் அர்ப்பணித்தனர். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

இந்த மாதம் 8 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறவுள்ள நமது இயக்கத்தின் தேசிய திட்டக் கூடுகைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். கேரீத் பத்திரிகை பலவிதங்களில் ஆசீர்வாதமாக இருப்பதை அறிந்து தேவனைத் துதிக்கிறேன். தொடர்ந்து வாலிபர் பிரிவு மற்றும் கேரீத் ஊழியங்களுக்காகவும், எங்களுக்காகவும் தயவாய் ஜெபியுங்கள். வேத வசனத்தில் வளருவோம். திருச்சபைக்கும், தேசத்திற்கும் ஆசீர்வாதமாய் வாழ்வோம்.

உங்கள் பகுதிகளில் / சபைகளில் வாலிபர் கூடுகைகள், முகாம் தலைமைத்துவ பயிற்சி, இளம் தம்பதியர் கூடுகை நடத்திட தயவாய் ஜெபித்து திட்டமிடுங்கள். எங்களை தொடர்பு கொண்டு இக்கூடுகையின் விவரங்களைத் தெரியப்படுத்தினால், உங்களுக்கு உதவ ஆயத்தமாக இருக்கிறோம். தேவனுக்கே மகிமையுண்டாவதாக!

 

கிறிஸ்துவின் பணியில்,

ஜெ. டேனியல் அருள்மணி


  View / Download :   Feb-Kerith2025Tamil.pdf

>> Archives
2022 (8)
2021 (9)
2016 (12)
2012 (12)