
Monday, Sep 01, 2025
நேர்வழியில் சென்றிட வா!
என் அன்பு இளம் உள்ளங்களுக்கு, கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!
நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்:
வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை
உங்கள் காதுகள் கேட்கும். (ஏசாயா 30:21)
கர்த்தர் நம் வாழ்க்கையைப் பற்றி கரிசனை உள்ளவராயிருக்கிறார். நாம் எப்படி வாழ்கிறோம், எந்த வழியில் செல்கிறோம் என்பது முக்கியம். நாம் நமக்கு விருப்பமான வழியில் செல்லவே எப்போதும் விரும்புவோம். அது நேர்வழியாகவோ அல்லது தவறான வழியாகவோ இருக்கலாம். ஆனால் கர்த்தர் நாம் எப்பொழுதும் நேர்வழியாக செல்லவே விரும்புகிறார்.
கர்த்தருடைய வழியைத் தெரிந்துகொள்ள அவருடைய வார்த்தையை (பைபிள்) படிக்க வேண்டும். அவருடைய வார்த்தையை கவனமாக, அமைதியாக படித்து, தியானிக்கும் போது அவருடைய மெல்லிய சத்தத்தைக் கேட்டு, அவர் நடத்தும் வழியில் நடப்போம் (நடத்தப்படுவோம்). கர்த்தர் நம்மை நடத்தும் பாதையை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் நம் இருதயங்களைச் சரிசெய்து அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும்.
அன்பான தம்பி, தங்கையே! இதை வாசிக்கும்போது நீ எப்படிப்பட்ட வழியில் நடந்து கொண்டிருக்கிறாய் என்பதை சிந்தித்து பார்! அநேக நேரத்தில் நீ சுயமாய் தெரிந்துகொண்ட வழியில் நடந்து, அதனால் பிரச்சனைகளையும், தோல்விகளையும் சந்தித்துக் கொண்டிருக்கலாம். இதிலிருந்து நீ எழும்பிவர முடியாமல் ஒரு வேளை வழி தவறி போயிருந்தால், கர்த்தருடன் ஒப்புரவாகி என்னை உம்முடைய நேர் வழியில் நடத்தும் கர்த்தாவே என்று அர்ப்பணித்து ஜெபிக்கும்போது அவர் உன்னை, உன் வாழ்வின் கடைசி மட்டும் அற்புதமாய் நடத்த வல்லவராயிருக்கிறார்.
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதி. 3:6).
கர்த்தருடைய கிருபையினாலும், உங்களுடைய ஜெபங்களினாலும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய உபவாச ஜெபம் மற்றும் வாலிபர் கூடுகைகளை (பாடி, நாசரேத், மார்த்தாண்டம், சூளகிரி, ராசிபுரம், குற்றாலம், ரெட்ஹில்ஸ்) கர்த்தர் ஆச்சரியமாய் நடத்தி தந்தார். அவருக்கே துதி கனம் மகிமை உண்டாகட்டும்.
வாலிபர் கூடுகைக்காக ஜெபித்து, உழைத்து, கொடுத்த அனைத்து தலைவர்கள், வாலிப தன்னார்வத் தலைவர்கள் அனைவருக்கும் இயக்கமாய் நன்றி சொல்கிறோம். தொடர்ந்து இம்மாதம் நடைபெறவுள்ள கூடுகைகள், பின்தொடர் ஊழியங்கள் தடையின்றி நடைபெற ஜெபித்துக் கொள்ளுங்கள்.
கர்த்தருடைய சித்தத்தின்படி நீங்கள் அவருடைய நேர்வழியில் சென்றிட ஜெபித்துக்கொள்கிறேன்.
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 