
Saturday, Mar 01, 2025
தோல்வியில் துவளாமல் வா...
என் அன்பு இளம் உள்ளங்களுக்கு, கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!
தோல்வி என்னும் பாடசாலைக்கு எவரும் தப்பியதில்லை. வெற்றிகளைவிட தோல்விகளிலிருந்தே நாம் அதிகம் கற்றுக் கொள்கிறோம். எதிர்ப்புகள், சோதனைகள், வீழ்ச்சிகள் இவை ஆண்டவருடைய பிள்ளைகளின் வாழ்வில் வரும்போது தேவன் அவர்களைத் தூக்கி எடுப்பதால் அவர்கள் எழுந்திருப்பார்கள். நம்மெல்லோருக்கும் சில வேளைகளில் ஆபத்தும், துன்பங்களும் வருவதுண்டு. அப்படிப்பட்ட நேரத்தில் ஆண்டவருடைய பிள்ளைகள் தேவனில் பலப்பட்டு அவரையே அடைக்கலமாகக் கொள்ள வேண்டும். சோதனை, தோல்வி நேரத்தில் தம்மை உண்மையாய் சார்ந்திருப்பவர்களுக்கு தேவன் தேவையான பெலத்தையும், கிருபையையும் தருகிறார்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவின் பிரசன்னத்தையும், வல்லமையையும் அனுபவிக்கிறவங்களாயிருந்தால் எந்தவிதமான துன்பமோ, வியாதியோ அல்லது துக்க சம்பவமோ உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் தோல்விக்கு காரணமாயிராது. தம்மிடம் விசுவாசமாயிருக்கும் அவருடைய பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் தேவன் கைவிடமாட்டார்.
“நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்” (நீதி. 24:16)
மே மாதம் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பெத்தேலில் (சேலம்-டேனிஷ்பேட்) நடைபெறவிருக்கும் மாநில முகாமிற்காக ஜெபித்து ஆயத்தமாகுங்கள். இன்று ஆண்டவருக்கென சாட்சிகளாய் வாழ்ந்துகொண்டிருக்கிறவர்கள் மற்றும் ஆண்டவருடைய ஊழியத்தை வல்லமையாய் செய்கின்றவர்களில் திரளானோர் நமது மாநில முகாமில் கலந்து கொண்டவர்கள். உங்கள் சபை / பகுதி வாலிபர்களிடம் நீங்கள் பேசி திரளாக கலந்துக்கொள்ளச் செய்யும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மார்ச் 5ஆம் தேதி தொடங்கயிருக்கின்ற லெந்து நாட்களில் உங்கள் பகுதியில் சங்கிலித் தொடர் ஜெபத்தை ஏற்படுத்தி ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நமது கேரீத் பத்திரிக்கையை தெரியாதவர்களுக்கு அறிமுகம் செய்து வாலிபர்கள் கிறிஸ்துவுக்கென எழும்பி பிரகாசிக்க ஜெபத்துடன் பிரயாசப்படுங்கள்.
கர்த்தர்தாமே உங்கள் வாழ்வில் ஜெயத்தைக் கட்டளையிடுவாராக. ஜெபிக்கிறோம்! ஆசீர்வதிக்கிறோம்!
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 