
Tuesday, Jul 01, 2025
என் அன்பு இளம் உள்ளங்களுக்கு, கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!
நாம் வாழும் இந்த உலகம் நம்மை ஆண்டவருக்கென சாட்சியாய் வாழவிடாமல், ஆண்டவரை விட்டு விலகிப் போகிறதற்குரிய ஏராளமான சந்தர்ப்பங்களை நமக்குத் தருகிறது. அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்ட கிறிஸ்துவின் பிள்ளைகள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கிறிஸ்துவுக்கென சாட்சியாய் வாழ்வார்கள்.
தானியேலின் வாழ்க்கையை அறிந்திருக்கிறோம். அவன் பிறந்த தேசம் வேறு, அவன் அடிமையாய் சென்ற தேசம் முழுவதும் மாறுபட்ட தேசம். தானியேலைக் கண்காணிக்க யாரும் இல்லாத இடத்தில், தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் உண்மையாய் இருந்தான். தினந்தோறும் தன்னுடைய நடவடிக்கையில் கட்டுப்பாடுடன் (Self Discipline) நடந்து கொண்டான். பாபிலோன் தேசம் பாவம், அசுத்தம், விபச்சாரம் நிறைந்த நாடு. என் தேவன் என்னை காண்கிறார் என்ற எண்ணத்தோடு தன்னுடைய பொறுப்பில் உண்மையைக் காத்துக் கொண்டான். அந்த தேசமே எதிர்த்து நின்றாலும், சட்டங்கள் சாதகமாக இல்லாத நிலையிலும் ஆண்டவருக்கென சாட்சியாய் வாழ்ந்தான். மடிந்து விடுவான், அழிந்து விடுவான் என்று நினைத்தவர்கள் நடுவில் ஆண்டவருக்கென சாட்சியாய் பிரகாசித்தான். அந்த பிரகாசத்தில் தேசத்தின் ராஜாவும், அதிபதிகளும் ஏன் மக்களும் கூட உண்மையான கடவுளை அறிந்து கொண்டார்கள். கடவுளுடைய நாமம் மகிமை அடைந்தது.
அன்பான வாலிபர்களே, கிறிஸ்து உங்களை அவருக்கென பிரகாசிக்க அழைக்கிறார். உன் வாழ்வு பிரகாசிக்க வேண்டுமானால் உன்னிடத்தில் சுயக்கட்டுப்பாடு வேண்டும். மேலும் தினந்தோறும் தேவ சமூகத்தில் அமர்ந்து, கர்த்தருடைய வார்த்தையை வாசிக்கவும், தியானிக்கவும் வேண்டும். அதோடு கூட தேவ வார்த்தையின் படி நடக்கவும், செயல்படவும் வேண்டும். அப்படி செய்தால் கிறிஸ்து உன்னை பிரகாசிக்கப் பண்ணுவார். இருள் நிறைந்த இந்த உலகில் நீ ஒரு சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாய் ஜொலிப்பாய்.
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
(தானியேல் 12:3)
உங்கள் பகுதியிலுள்ள ஆலயங்களில், வேலை ஸ்தலங்களில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாலிபர்கள் எழும்பி பிரகாசித்திட கர்த்தர் தாமே உங்களைப் பயன்படுத்துவாராக. ஆமென்!
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 