
Wednesday, Apr 01, 2026
செயல் களத்தில் ஜீவனை அர்ப்பணிப்போம்!
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!
ஜிம் எலியட்
நமது இயக்கத்தின் முன்னாள் பொது காரியதரிசி திரு. பேட்ரிக் ஜாஷ்வா அண்ணன் அவர்களின் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஜிம் எலியட். 23 வயதான இவர், தன்னுடைய இளம் வயதை தேவையுள்ள நமது தேச மக்களாகிய ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வரும் மால்தோ மக்களுக்காக அர்ப்பணித்தார்.
மால்தோ மக்கள் மலேரியா, காலரா, T.B போன்ற வியாதிகளால் அழிந்துவருவதைக் கேள்விப்பட்ட ஜிம் எலியட், அவர்களுக்கு உதவி செய்திட, அந்த மக்களை அழிவிலிருந்து காப்பாற்றிட தன்னைத் தேவனுக்காக அர்ப்பணித்தார்.
ஜிம் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மேலும், தனது வாழ்க்கையை அனைத்து விதத்திலும் வசதியாக அமைத்துக் கொள்ள வாய்ப்புகள் இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் விரும்பாமல், மால்தோ மக்களின் நல்வாழ்விற்காக தன்னுடைய ஜீவனை அர்ப்பணித்தார். ரோமர் 12:1இன்படி தேவனுடைய இரக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஜிம் தன்னை ஜீவபலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்.
கிறிஸ்தவர்களாகிய நமக்கு முதலும், முக்கியமானதுமான பணி எது? நமது சரீரங்களைத் தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதுதான். பவுல் சரீரம் என்று சொல்லும்போது நமது ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற முழு மனிதனையும் குறிப்பிடுகிறார். நாம் ஒப்புக்கொடுக்க வேண்டிய சரீரம் ஜீவனுள்ளதாக, கறையற்றதாக இருக்க வேண்டும். தேவனுடைய இரக்கத்திற்குப் பதிலளிக்கும் விதமாக நாம் நமது சரீரங்களை ஜீவபலிகளாக ஒப்புக்கொடுக்க வேண்டும். ஏனென்றால், இயேசுகிறிஸ்து தமது சரீரத்தை நமக்காகப் பலியாக ஒப்புக்கொடுத்தார். இதுதான் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் ஆவிக்குரிய ஆராதனை. இப்படிப்பட்ட பலி அவருக்கு பரிசுத்தமும், பிரியமுமாயிருக்கும்.
அன்பான வாலிபர்களே! அவர் நமக்காக செய்திருப்பதுடன் ஒப்பிட்டு பார்த்தால், நாம் அவருக்காக செய்வதெல்லாம் மிகமிகக் குறைவே! எனவே, நீங்கள் இந்த இளம் வயதில் ஜீவனை அவருக்கென்று அர்ப்பணியுங்கள்.
LEAD Training Programme மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆண்டவருடைய கிருபையால் 55 வாலிபத் தலைவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். மார்ச் மாதம் பம்மல் பகுதியில் புதிதாக Youth Fellowship ஆரம்பிக்க கர்த்தர் கிருபைச்செய்தார். மே 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சேலம், டேனிஷ்பேட்டை பெத்தேல் வளாகத்தில் நடைபெறவுள்ள தமிழ் மாநில முகாமிற்காக ஜெபியுங்கள். இந்த ஆண்டு சுமார் 1000 வாலிபர்கள் கலந்துக்கொள்ள வேண்டும். உங்களை அன்புடன் அழைக்கிறோம். உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!
கர்த்தர்தாமே உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி
Sunday, Mar 01, 2026
சபைக் களத்தில் சீஷத்துவம் காண்போம்!
என் பின்னே வாருங்கள் என அழைக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!
ஆஸ்திரேலியாவின் செழிப்பில் வளர்ந்த கிளாடிஸ், தன் எதிர்காலத்தைக் குறித்து திட்டமாக முடிவெடுக்க கர்த்தர் பல வசனங்கள் மற்றும் அவளது பணியின் மூலமாக உறுதிபடுத்தினார். கர்த்தரின் விருப்பத்தைப் புரிந்துக்கொண்ட கிளாடிஸ், ஓய்வு நாள் பள்ளி ஆசிரியையாகவும், வாலிப ஊழியங்களில் பகுதி நேரமாகவும் பணிச் செய்தாள். இவ்வாறு எதைச் செய்தாலும் இதைக் கர்த்தருக்காக செய்கிறேன் என்ற உணர்வுடன் செயல்பட்டாள். இதுதான் கிளாடிஸ் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
வரி வசூலிக்கும் பணியைக் கவனமாகச் செய்துகொண்டிருந்த மத்தேயுவைப் பார்த்து இயேசு: “எனக்கு பின் சென்று வா” (மத். 9:9) என்று கூப்பிட்டார். இயேசுவின் இந்த முதல் அழைப்பு அவரைப் பின்தொடரவும், அவரோடிருந்து அவரை அறிந்துக் கொள்வதுமேயாகும். இப்படிப்பட்ட உறவை அவரோடு கொள்வதற்கு தான் சீஷனாக அழைக்கிறார். சீடத்துவம் என்பது அவருக்கு பின் செல்வதேயாகும்.
“சீடர்கள் தன்னலமின்றி நடக்கவே கிறிஸ்துவின் பாடசாலையில் முதலாவது கற்றுக்கொள்ள வேண்டும்” என வேத அறிஞர் மேத்யூ ஹென்றி கூறுகிறார். சுயத்திற்குச் செத்துக்கொண்டே இருப்பதுதான் ஒரு சீடனின் அனுதின கடமையாகும். அதுதான் இயேசு காட்டிய மாதிரி. இவ்வாறு சிலுவைக்கு “ஆம்” என்று கூறி சுயத்திற்கு “இல்லை” என்பதுதான் சீடத்துவம். சிலுவைக்கு “ஆம்” என்பது, சுயத்திற்கு “இல்லை” என்பதைவிடக் கடினம். இரண்டையும் செய்தால்தான் கிறிஸ்துவுக்கு உண்மையான சீடனாய் இருக்க முடியும். கிளாடிஸ் கிரகாம் ஸ்டெயின்ஸ் சுயத்திற்கு “இல்லை” என்று சொல்வதில் உறுதியாகிவிட்டார்கள். இதை வாசிக்கும் வாலிபர்களே! நீங்கள் எப்போதும் இயேசுவைப் பின்பற்றும் சீஷனாயிருங்கள்.
பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற மிஷனெரி நேர்முகத் தேர்வில் 12 பேர் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து உங்களுடைய ஜெபங்களில் இவர்களை நினைத்துக் கொள்ளுங்கள். கர்த்தருக்கு சித்தமானால் மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் இறைவனின் தோட்டம் பூண்டியில் நடைபெறவிருக்கும் LEAD TRAININGஇல் வாலிபர் மத்தியில் ஊழியம் செய்ய உங்களுக்கு வாஞ்சையிருக்குமாயின், இக்கூடுகையில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
தேவக் கிருபை உங்களோடிருப்பதாக.
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி
Sunday, Feb 01, 2026
ஊழியக் களத்தில் பரிசுத்தம் காண்போம்!
பரிசுத்தமுள்ளவரும், பரிசுத்தத்திற்கென்று அழைத்தவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேரீத் பத்திரிக்கையை வாசிக்கிற வாலிபர்கள் அனைவருக்கும் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
“உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல,
நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.” (1 பேதுரு 1:15)
கர்த்தர் பரிசுத்தமுள்ளவர், அதனால் அவருடைய மக்களும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தின் மூலம் பேதுரு கூறுகிறார். ஏனென்றால் பரிசுத்தம் என்பது இவ்வுலகில் காணப்படும் பாவத்தை விட்டுவிட்டு கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவரை ஏற்றுக்கொண்டு, அவரை ஆராதிக்கும் ஒரு பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதாகும். ஆனால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லியும், நாம் ஏன் பாவத்தில் விழுந்து எழுந்திருக்கிறோம்? ஏனென்றால் இரட்சிக்கப்படும்போது நாம் பாவத்தின் தண்டனையிலிருந்து விடுதலை பெறுகிறோம். பாவத்தின் பிரசன்னத்திலிருந்து விடுதலை என்பது கிறிஸ்துவோடு வாழும் எதிர்கால வாழ்க்கையாகும். இப்போது நாம் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் பாவ சோதனையின் வழியாகவும், பாவம் செய்யக் கூடியதான சூழ்நிலை வழியாகவும் கடந்து வந்தாலும் பரிசுத்த ஆவியானவரின் துணையைக் கொண்டு பாவத்தை மேற்கொள்ள முடியும் (1 யோவான்2:1; 3:6).
வாலிப நாட்களில் பல பாவ வழிகளில் நடந்து, கள்ள உபதேசங்களைக் கேட்டு, இயேசுவை விட்டு தூரம் சென்று வாழ்ந்தவர் அகஸ்டின். ஒரு நாள் பூங்கா ஒன்றில் தனிமையாக பல மன குழப்பங்களோடு உட்கார்ந்திருக்கும்போது ரோமர் 13:12 என்ற வசனத்தை “எடுத்து வாசி” என்ற சத்தத்தைக் கேட்டு வேதத்தை திறந்து படித்தார். உடனே, அவர் தன் வாழ்க்கையில் செய்த தவறுகளை அறிக்கையிட்டு இயேசுவிடம் மனந்திரும்பினார். பின்னர், அவர் அநேக பாவிகளைக் கிறிஸ்துவிடம் கொண்டுவருகிற பரிசுத்த அகஸ்டினாக மாறினார். அவருடைய பாவ அறிக்கையில் அவர் சொன்னது: “இயேசுவே உம்மை நான் புரிந்துக் கொண்டு அன்பு செய்வதற்கு எவ்வளவு பின்தங்கி விட்டேன். நீர் எனக்குள் இருந்தீர், ஆனால் நானோ வெளி உலகத்தில் அலைந்து திரிந்துக் கொண்டிருந்தேன். நீர் என்னோடு இருக்க, நான் உம்மோடு இல்லாதிருந்தேன். இப்போது உம் மீது மட்டுமே எனக்கு பசியும், தாகமும் உள்ளது. நீர் தரும் உண்மையான அமைதிக்காக நான் ஏங்கி நிற்கிறேன்.”
வாலிபர்களாகிய நீங்கள் எத்தனை பேர் இயேசுவின் அன்பை விட்டுவிட்டு, ஏதோ ஒருவருடைய அன்புக்காக ஏங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், உங்களை சற்று ஆராய்ந்துப் பாருங்கள். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” (மத். 22:37) என்ற வசனத்தின்படி இயேசு உன்னை அவரோடு நெருங்கி வாழ்ந்து பாவத்தை விட்டு முற்றிலும் அவருக்காக பரிசுத்தமாய் வாழ அழைக்கிறார். நீ வாழும் இடம், படிக்கும் இடம் மற்றும் வேலை பார்க்கும் இடமே உன்னுடைய ஊழியக்களமாகும். இந்த ஊழிய களத்தில் பரிசுத்தமுள்ள வாழ்க்கை வாழ உன்னை ஒப்புக் கொடுப்பாயா (ரோமர் 12:1). ஒப்புக்கொடுக்கிற உன்னை பரிசுத்தமுள்ள கர்த்தர் பரிசுத்தப்படுத்துவார்.
“பரிசுத்தமற்ற உலகிலிருந்து, பரிசுத்தமற்ற ஒரு மனிதனை கடவுள் எடுத்து, அவனை பரிசுத்தமாக்கி, மறுபடியும் இந்த பரிசுத்தமற்ற உலகில் வைத்து, பரிசுத்தமாய் காக்கிறாரே அதுதான் அற்புதங்களில் எல்லாம் அற்புதம்.” - லியோனார்டு ரேவன்ஹில்
ஜனவரி மாதத்தில் நடந்த வாலிபர் முகாம்கள் சிறப்பாக நடைபெற கர்த்தர் உதவிச் செய்தார். இதற்காக பாரத்தோடு ஜெபித்து, உழைத்து, செயல்பட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்தில் லெந்து நாட்கள் ஆரம்பிப்பதால் வாலிபர்கள் உங்கள் பகுதியில் ஒரு மணி நேரமோ அல்லது மூன்று மணி நேரமோ உபவாசமிருந்து குழுவாக தேசத்திற்காகவும், மிஷனெரி பணிக்காகவும் ஜெபியுங்கள். நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் வளருவதற்கு இந்நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தேவக் கிருபை உங்களோடிருப்பதாக.
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி
Thursday, Jan 01, 2026
களங்களில் புதிய பரிணாமம் காண்போம்
புதிய பார்வையோடு, புதுமைகளைச் செய்யத் துடிக்கும் வாலிபர்களுக்கு,
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் 2026ஆம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
களம் (Field) என்பது - இடம், போர்க்களம், ஆடுகளம், நெற்களம், தேர்தல் களம் போன்ற அர்த்தங்களைக் கொண்டது. இது ஒரு செயல் நடக்கும் இடத்தைக் குறிக்கும். பரிணாமம் (Evolution) என்பதற்கு வளர்ச்சி, முன்னேற்றம், விரிவாக்கம் என்கிறதான வேறு வார்த்தைகள் உண்டு. வளர்ச்சி அல்லது முன்னேற்றம் என்பது பொதுவான பொருள். ஒரு நிலை அல்லது வடிவத்திலிருந்து, மற்றொரு நிலைக்கு மாறுவதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக வண்ணத்துப்பூச்சியின் உருமாற்றத்தை எடுத்துக் கொள்ளலாம். இது முட்டை - கம்பளிப்புழு (லார்வா) - கூட்டுப்புழு - வண்ணத்துப்பூச்சி என நான்கு நிலைகளை வாழ்க்கை சுழற்சியாக கொண்டுள்ளது.
முட்டை நிலையிலிருந்து வண்ணத்துப்பூச்சி நிலைக்கு வருவது போன்று, நாம் எந்த நிலையிலிருந்தாலும் கிறிஸ்து என்ற நிலைக்குள் வரவேண்டும் என்பதே கர்த்தர் உங்களிடத்திலும், என்னிடத்திலும் எதிர்பார்க்கும் மாற்றம். இதற்கு ரோமர் 12:2வது வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டு, வேத வசனங்களை வாசிப்பதின் மூலமும், அதை தியானிப்பதின் மூலமும் உங்கள் மனம் கர்த்தருக்கு உகந்த வகையில் சிந்திக்கும்படி செய்ய வேண்டும். உங்களுடைய திட்டங்கள், இலக்குகள், ஆசைகள் அனைத்தும் பரலோகத்துக்கடுத்த நித்தியமான சத்தியத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும். நீங்கள் போர்க்களம், ஆடுகளம், நெற்களம், தேர்தல் களம் என்ற எந்த களத்திலிருந்தாலும் வண்ணத்துப்பூச்சியைப் போல புதிய நிலைக்கு மாறி, கிறிஸ்துவுக்காக வாழக்கூடிய புதிய பரிணாமம் காண வேண்டும்.
கடந்த ஆண்டு முழுவதும் ஊழியத்தின் வகைகளையும், அதைக் குறித்ததான தெளிவையும் பெற்ற நாம், தேவ ஒத்தாசையோடு அந்த ஊழியத்தை இன்னும் தீவிரப்படுத்த ஜெபத்தோடு களங்களில் வீரியம் என்ற தலைப்பின் கீழ் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிலைகளில் 12 மாத புத்தகங்களையும் கொண்டுவருகிறோம்.
ஆதலால் இவ்வருடத்தின் முதல் இதழை, களங்களில் புதிய பரிணாமம் காண்போம் என்ற தலைப்புடன் ஆரம்பிக்கிறோம். இவ்வாண்டு பத்திரிகையின் அனைத்து பக்கங்களும் களம் என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது. இப்பத்திரிக்கையானது வாலிபர்கள் ஜெபக்குழுக்களில் பயன்படுத்தும் வகையில் நான்கு வாரத்திற்கான செய்திகளும், எட்டு பக்கங்களில் ஜெபக்குறிப்புகளும், ஏழு விதமான தலைப்புகளில் சிறப்புச் செய்திகளும் எழுதப்படுகின்றன. இதை ஜெபத்துடனும், கவனத்துடனும் வாசித்து, இயேசு கிறிஸ்துவின் அறிவில் வளர்ந்து, அவருடைய ராஜ்யத்தை கட்டும் மிஷனெரிப்பணியில் முழு மனதோடு ஈடுபடுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
இம்மாதம் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் (பொங்கல் விடுமுறையில்) நடைபெறுகிற வாலிபர் முகாமிற்காக ஜெபியுங்கள். வாலிபர்கள் இம்முகாமில் திரளாய் வந்து கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம். 2025ஆம் ஆண்டு முழுவதும் வாலிபர் ஊழியத்திற்காக ஜெபித்து, ஆதரவு கொடுத்த அனைத்து முழு நேர ஊழியர்களுக்கும், கௌரவ முன்னேற்றப்பணி செயலர்களுக்கும், வாலிபத் தலைவர்களுக்கும், வாலிபர்கள் அனைவருக்கும், கேரீத் பத்திரிக்கை எழுத்தாளர்கள் அனைவரின் சார்பாக உங்களுக்கு நன்றிகளைக் கூறுகிறோம். இந்த புதிய ஆண்டிலும் கேரீத் பத்திரிக்கை வெளிவருவதற்கு உதவியாயிருக்கும் எழுத்தாளர்கள், அலுவலகப் பணியில் உதவி செய்கிற திருமதி. எப்சி மற்றும் எங்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.
தேவக் கிருபை உங்களோடிருப்பதாக.
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி
Monday, Dec 01, 2025
ராஜாவின் வேலையைச் செய்திட வா!
என் அன்பு இளம் நெஞ்சங்களுக்கு, கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!
1904ஆம் ஆண்டில் வேல்ஸ் நாட்டில் மாபெரும் எழுப்புதல், பல ஆயிரம் மக்கள் மனந்திரும்பினர். இந்த மாபெரும் அறுவடைக்குக் காரணம் யார்? இவான் ராபர்ட்ஸ் (1879-1951) என்ற பக்தன் கிறிஸ்துவின் அன்பினால் உந்தப்பட்டு 13 ஆண்டுகள் கண்ணீருடன் ஜெபித்து, கடவுளின் அன்பை மக்களுக்கு எடுத்துச் சொன்னதால் நடந்தது.
“யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்
என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்:
இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்” (ஏசாயா 6:8).
மேற்காண்கிற வசனத்திற்கு தன்னை அர்ப்பணித்து இந்தியாவிற்கு வந்த வில்லியம் கேரியின் ஊழியத்தின் விளைவுகள் எத்தனையான மாற்றத்தை மேற்கு வங்காள மாநிலத்திற்கு தந்தது மாத்திரமல்ல, அவருடைய அர்ப்பணிப்பான தியாகமுள்ள ஊழியத்தின் மூலமாக அவர் “நவீன மிஷனெரி இயக்கங்களின் தந்தை” என அழைக்கப்பட்டார்.
வேதாகமம் முழுவதும் பல்வேறு சூழ்நிலையில் இருந்து கடவுள் தம்முடைய ஊழியத்தைச் செய்வதற்கு அழைப்பதை நாம் பார்க்கிறோம். தமது மக்களை எகிப்திலிருந்து வெளியே நடத்திச் செல்ல மோசேயை அழைத்தார். தமது மக்களை ஆண்டு நடத்த மேய்ப்பனாகிய தாவீதை அழைத்தார். இவைகள் அனைத்திற்கும் மேலாக முழுநேரப் பணி செய்யும்படி இயேசுவே அழைத்தார். (இந்த பட்டியலில்) இப்படி தொடர்ச்சியாக பேதுரு, மத்தேயு, பவுல் எனத் தொடர்கிறது.
தம்பி, தங்காய்! நமது ராஜாவின் வேலையைச் செய்ய எப்போதும் காலி இடமுண்டு. டாக்டர், இஞ்சினியர், அட்வகேட், டீச்சர் இன்னும் இது போன்ற வேலைகளுக்கு எப்போதும் கூட்டமாக, போட்டியாக உள்ள இந்த நாட்களில், ராஜாவினுடைய வேலையை (கிறிஸ்துவினுடைய ஊழியம்) செய்ய வருவோர் மிகவும் குறைந்துக் கொண்டே இருக்கின்ற நிலையை நாம் பார்க்கிறோம். நமது ஆர்வம் அல்லது தாலந்து எதுவாயிருந்தாலும், ஆண்டவருடைய தோட்டத்தில் அதற்கேற்ற வேலைகள் உண்டு.
டேவிட் லிவிங்ஸ்டன் ஒரு பூகோள ஆராய்ச்சியாளர். இவர் மிஷனெரியாகச் சென்றார். C. T. ஸ்டட் ஒரு புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர், இவரும் மிஷனெரிப் பணியை தெரிந்து கொண்டார். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல, மேரி ஸ்லேசர், ஐடா ஸ்கடர், பண்டித ராமாபாய் இப்படி ஆண்டவருடைய ஊழியத்தில் இன்றும் அநேக பெண்கள் வல்லமையாய் ஆண்டவருக்கு மகிமையான ஊழியத்தைச் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட மகிமை நிறைந்த ராஜாவின் வேலையைச் செய்ய அழைப்பு இல்லை, தரிசனம் இல்லை என்ற சாக்கு, போக்குகளைச் சொல்லாமல், அவருடைய சத்தத்திற்குச் செவி கொடுத்து, அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம் என்ற வசனத்திற்கு நம்மை அர்ப்பணித்து, ராஜாவின் உன்னதமான வேலையைச் செய்ய முன்வருவோமா?
2025ஆம் ஆண்டு 11வது மாதம் வரை கர்த்தர் நமது வாலிப பிரிவின் ஊழியங்களை மிகவும் வல்லமையாய் ஆசீர்வதித்து வழிநடத்தி வந்தார். எங்களுக்காக ஜெபித்த, எங்களோடு ஊழியம் செய்த, எங்களை ஊக்குவித்த அத்தனை தேவனுடைய பிள்ளைகளையும் இந்நாட்களில் நன்றியோடு நினைவுக் கூறுகிறோம்.
முதல் கிறிஸ்துமஸ் அன்று மேய்ப்பர்கள் பிள்ளையைக் குறித்த செய்திகளை எங்கும் சொன்னார்கள். கிறிஸ்துமஸ் காலத்தை நற்செய்திப் பணிக்காக செலவிடுவோம்! முதல் வருகையைக் கொண்டாடும் நாம், நம் ராஜாவினுடைய இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவோம்.
உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாகட்டும்.
கேரீத் வாசகர்கள் அனைவருக்கும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேவ கிருபை எப்பொழுதும் உங்களோடிருப்பதாக!
கிறிஸ்துவின் உன்னதப் பணியில்
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 