Tamil

Magazine - Tamil
தேசத்திற்காய் திறப்பில் நின்றிட வா!
Friday, Aug 01, 2025

arrow Click to enlarge.

என் அன்பு இளம் உள்ளங்களுக்கு, கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!

டேவிட் பிரெய்னார்டு என்ற தேவ ஊழியர் மன்றாட்டு ஜெபத்தினை ஏறெடுக்க, முற்றிலுமாக தன்னை அர்ப்பணித்திருந்தார். இவர் அமெரிக்காவின் அடர்த்தியான காடுகளில் இரவு முழுவதும் வியர்வையால் தனது ஆடை நனைந்து போகுமளவும் வியாகுலத்துடன் ஜெபித்ததாக கூறப்படுகிறது. அதனிமித்தம் திடீரென்று அந்த பிராந்தியம் முழுவதும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அபரிமிதமாய் ஊற்றப்பட்டது. நாலு பெண்களும், ஒரு சில குழந்தைகள் மாத்திரமே அவரது கூட்டத்தில் இருந்தனர். மன்றாட்டு ஜெபம் ஏறெடுத்தபிறகு, மக்கள் கூட்டம் திரள்திரளாக நான்கு திசைகளிலுமிருந்து அவரை நோக்கி வந்து, அவர் சவாரி செய்த குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு இரட்சிப்பின் வழியை தங்களுக்கு தெரிவிக்கும்படி கதறினார்கள். தேவ வார்த்தை அம்பைப்போல அவர்களுடைய இருதயத்தை ஊடுருவ பாய்ந்ததினிமித்தம் தங்களுடைய வேதனையை மறைத்து வைக்க இயலாமல் மிகுந்த துயரத்துடன் “எங்கள் மேல் கிருபையாயிரும்” என்று கதறினார்கள். மேலும் தங்கள் வாழ்வை சிலுவையின் அண்டையில் அர்ப்பணித்தார்கள்.

மன்றாட்டு ஜெபம் என்பது ஆண்டவருடைய இராஜியத்தை விரிவுப்படுத்துவதாகும். சாத்தானைத் தோற்கடித்து, அவனுடைய அந்தகார ஆட்சியை அகற்றி, தேவ இராஜியத்தை எல்லோருடைய உள்ளங்களிலும், இல்லங்களிலும் விரிவாக்குவதாகும். ஆபிரகாம் லோத்திற்காக போராடி ஜெபித்து ஜெயம் பெற்றதுபோல (ஆதி. 18:28, 23), மோசே இஸ்ரவேலரின் வெற்றிக்காக போராடி அமலேக்கியர் மேல் வெற்றியடைந்தது போல, எலியா பின்னடைந்த இஸ்ரவேல் மக்களுக்காக மன்றாடி ஜெபித்தது போல, நானும், நீங்களும் நம்முடைய தேசத்திற்காக மன்றாட்டு ஜெபம் செய்ய அழைக்கப்படுகிறோம். எப்பாப்பிரா, கொலோசே திருச்சபை விசுவாசிகள் ஆவிக்குரிய முதிர்ச்சி பெறவும், ஆவிக்குரிய வளர்ச்சியடையவும் எப்பொழுதும் போராடி ஜெபித்தது போல், நமது தேசம், திருச்சபை, வாலிபர்கள் எழுப்புதல் அடையும்படி மன்றாடி ஜெபிக்க நம்மை அர்ப்பணிப்போமா? மன்றாட்டு ஜெபம் மட்டுமே நம்முடைய வாழ்வில் மற்றும் ஊழியத்தில் வெற்றியைக் கொண்டு வரும்.

ஜூலை மாதம் சென்னை மற்றும் பொன்னேரியில் வாலிபர்களின் மாதாந்திர ஐக்கிய கூடுகை புதிதாக ஆரம்பிக்க ஆண்டவர் கிருபை செய்தார். இப்படிப்பட்ட ஐக்கிய கூடுகைகள் நமது முன்னேற்றப்பணி மாவட்டங்களில் நடைபெற ஜெபிப்போம்! செயல்படுவோம்!!

ஆகஸ்ட் மாதத்தில் அநேக வாலிபர் கூடுகைகள் நடைபெற உள்ளன. கர்த்தர்தாமே இக்கூடுகைகள் மூலமாக வல்லமையான காரியங்களை நடப்பிக்கதக்கதாக உங்களுடைய ஜெபங்களின் நினைவு கூறுங்கள். நமது இயக்கத்தின் தேசிய உபவாச ஜெப முகாம் ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய நாட்களில் திருப்பத்தூரில் உள்ள கிறிஸ்து குல ஆசிரமத்தில் நடைபெற உள்ளது. இந்த ஜெப முகாமில் கலந்து கொண்டு தேசத்திற்காக ஜெபிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

 

கிறிஸ்துவின் பணியில்,

ஜெ. டேனியல் அருள்மணி


  View / Download :   August-Kerith2025Tamil-.pdf

>> Archives
2022 (8)
2021 (9)
2016 (12)
2012 (12)