
Saturday, Nov 01, 2025
தடுமாற்றமின்றி வாழ்ந்திட வா!
என் அன்பு இளம் நெஞ்சங்களுக்கு, கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்!
தோல்விகளைச் சந்திக்காத மக்களே இந்த உலகத்தில் இல்லை. நடைமுறை வாழ்க்கையில் வெற்றியைப் போல, தோல்வியும் நம்முடைய வாழ்க்கையில் முன்னேறி செல்வதற்கு உதவியாக இருக்கும்.
ஒவ்வொரு வெற்றியின் பாதையிலும் ஏராளமான அல்லது அநேக தோல்வி தடங்கள் தென்படுவது யதார்த்தம் (Reality). ஆனால் நம்முடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே தோல்வியே கூடாது, எப்போதும் எதிலும் வெற்றியே வேண்டும் என்ற மனநிலையில் நாம் வளர்க்கப்படுகின்றோம். ஏதேனும் ஒரு தோல்வியை நாம் சந்திக்கும் போது பதறிப் போவதோடு, பல விபரீதமான முடிவுகளையும் எடுக்கிறோம்.
இப்படிப்பட்ட நேரங்களில் நாம் தடுமாறாமல் பிரச்சினைகள் சிறிதோ, பெரிதோ அதை நேரடியாக மேற்கொள்ள தேவ பலனையும், தேவ வல்லமையையும் கர்த்தருடைய சமூகத்திலிருந்து பெற்றுக் கொண்டு, அவருடைய வார்த்தையின்படி வாழ நம்மை அர்ப்பணிக்கும் போது, நமது வாழ்க்கையில் தடுமாறாமல், இந்த உலகத்தில் கடவுள் நமக்கு நியமித்திருக்கிற வாழ்க்கையின் ஓட்டத்தில் முன்னேறி செல்வோம்.
“நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்” என்று சங்கீதம் 119:32இல் பார்க்கிறோம்.
கர்த்தர்தாமே நமது வாழ்க்கைப் பாதையில் வருகிற சவால்களைத் தாண்டி, தடுமாற்றம் இன்றி ஓடிட பெலன் தருவாராக. ஆமென்!
அக்டோபர் மாதத்தில் வட இந்திய பணித்தள ஊழியங்கள், வாலிபர் முகாம்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் வாலிபர் கூடுகைகளைக் கர்த்தர் ஆசீர்வதித்துக் கொடுத்தார். நிச்சயமாக கர்த்தர் கடந்த மாதங்களில் நடைபெற்ற ஊழியத்தின் மூலமாக மகிமைப்பட்டார். ஜெபித்த உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து வாலிபர்கள் மத்தியில் எழுப்புதல் உண்டாக ஜெபித்து, செயல்படுவோம்.
தேவ கிருபை எப்பொழுதும் உங்களோடிருப்பதாக!
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 