
Tuesday, Apr 01, 2025
பலவீனத்தில் வெற்றிக் காண வா...
என் அன்பு இளம் உள்ளங்களுக்கு, கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!
கிறிஸ்தவ வாழ்வு பந்தயம், போராட்டம் மற்றும் யுத்தம் நிறைந்தது. இதில் கவனமாயிராவிட்டால் வெற்றி பெற முடியாது. கிறிஸ்தவ வாழ்வில் நாம் பின்மாற்றமடையாதிருக்க, அசதியாயிராமல் கவனமாயிருக்க வேண்டும். போனால் போகட்டும் என்று எதையும் எளிதாக நினைத்து விட முடியாது. ஆபிரகாம் பொறுமையாய்க் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்.
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரெயர் 12:1)
நமது இந்த விசுவாச ஓட்டத்தை உற்சாகத்துடன் முடிக்க இப்படிப்பட்ட சாட்சிகள் மட்டுமல்ல, கடவுள் நமக்கு மேலாக வைத்துள்ள உத்தம தலைவர்களிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ளலாம். நீங்களும் நானும் ஆராதிக்கிற கடவுள் ஏதோ ஒரு சில ஆண்டுகளில் கொஞ்சம் மக்களை அல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் பல கோடி உள்ளங்களை வழிபிசகாமல் வழிநடத்தி வந்துள்ளார். ஆகையால் நமது விசுவாச வாழ்வில் வருகின்ற சோதனைகளை, பாடுகளைக் கண்டு நமது பலவீனங்களில் சோர்ந்து போகாமல், சிலுவையில் வெற்றி சிறந்த, வெற்றி நாயகனாம் இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையாய் ஓடி வெற்றியைச் சுதந்தரித்துக் கொள்வோம். உயிர்த்தெழுந்த இயேசு நமது பலவீனங்களைச் சிலுவையில் சுமந்து நமக்கு வல்லமையையும், பலத்தையும், வெற்றியையும் தந்திருக்கிறார். ஆகையால் சோர்ந்து போகாதே, துவண்டு விடாதே வெற்றிக்காண வா!
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அர்ப்பணித்தோர் முகாம் மற்றும் மிஷனெரி வாலிபர் தரிசனக் கூடுகைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். ஜூன் மாதம் 6, 7ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள மிஷனெரி ஊழியத்திற்கான நேர்முகத் தேர்வில் ஆண்டவருடைய ஊழியத்திற்கென அர்ப்பணித்த வாலிபர்கள் இந்த நேர்முகத் தேர்வில் கலந்துக் கொண்டு மிஷனெரியாய் புறப்பட்டுச் செல்ல பரிசுத்த ஆவியானவர் பலத்த கிரியைச் செய்வாராக. மே மாதம் நடைபெறவுள்ள மாநில முகாமில் உங்கள் பகுதி வாலிபர்களோடு திரளாய் வந்து கலந்துக்கொள்ள உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நமது இயக்கத்தின் புதிய பொது காரியதரிசியாக (General Secretary)
Rev. விஜய் பிரசன்னா ஐசக் அவர்கள் பொறுப்பெடுத்துள்ளார்கள். கர்த்தர் தாமே அண்ணனுக்கு ஞானத்தையும், பெலத்தையும், கிருபையையும் தந்தருள ஜெபிக்கிறோம், வாழ்த்துகிறோம்!
சிலுவையில் வெற்றி சிறந்த ஆண்டவர், உங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் வெற்றியைத் தருவாராக. ஆமென்!
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 