
Thursday, May 01, 2025
உத்தமமாய் வாழ்ந்திட வா!
என் அன்பு இளம் உள்ளங்களுக்கு, கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!
இஸ்ரவேல் மக்களுக்கு தாம் கொடுக்கப்போகிற கானான் தேசத்தை சுற்றிப் பார்க்க கடவுள் 12 கோத்திரத்திலிருந்து 12 பேரை தெரிந்தெடுத்து அனுப்பினார். அவர்கள் 40 நாட்கள் கானான் தேசத்தை சுற்றிப் பார்த்தனர். அதன் பின் அவர்கள் மோசேயினிடத்திற்கு திரும்பி வந்து செய்தியைச் சொன்னார்கள். அதில் யோசுவா மற்றும் காலேப் தவிர மற்றவர்கள் நம்பிக்கையற்ற செய்தியைச் சொன்னார்கள். இதை நாம் எண். 13:28இல் பார்க்கலாம். இதனால் மக்கள் அனைவரும் இரவு முழுவதும் அழுது புலம்பினார்கள். ஆனால் யோசுவாவும், காலேபும் கர்த்தர் நமக்கு கானான் தேசத்தை வாக்குபண்ணியிருக்கிறார், ஆதலால் நமக்கு நிச்சயம் தருவார் என்று சொன்னாலும், மக்கள் இதை நம்பவில்லை. ஆதலால் இவர்கள் இரண்டு பேரைத் தவிர மற்ற ஒருவரும் கானான் தேசத்திற்குள் செல்ல முடியவில்லை. சுமார் 6 லட்சம் மக்களுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்து, தேவனுடைய வாக்கை நம்பினபடியால் யோசுவா, காலேப் மற்றும் இவர்கள் குடும்பங்கள் மட்டுமே கானான் தேசத்திற்குள் சென்றனர். இதில் காலேப் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினபடியால், கால் மிதிக்கும் தேசத்தைக் கர்த்தர் அவனுக்கு கொடுத்தார்.
என் அன்பு இளம் நெஞ்சங்களே! நானும், நீயும் கர்த்தரை உத்தமமாய் பின்பற்ற அழைக்கப்படுகிறோம். இந்த உலகை நம்பி, உலகத்தோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை அல்ல, கிறிஸ்துவை உத்தமமாய் பின்பற்றி வாழ அர்ப்பணித்தால் உனக்கு எதிராக என்ன வந்தாலும், எது நடந்தாலும், எத்தனைக் கூட்டம் எதிர்த்து நின்றாலும், இந்த மாயையான உலகத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றி உத்தமமாய் வாழ உன்னை அர்ப்பணிப்பாயா? இயேசு நாத்தான்வேலைப் பார்த்து இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன் (யோவான் 1:47) என்று சொன்னது போல, உன்னையும் அழைக்கிறார். உத்தமமாய் வாழ்ந்திட வா!
இம்மாதம் பெத்தேலில் நடைபெறவுள்ள நமது தமிழ் மாநில முகாமில் கலந்து கொள்ள ஜெபத்துடன் நீங்கள் எடுக்கிற எல்லா முயற்சிகளையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மிஷனெரி நேர்முகத் தேர்வில், மிஷனெரி ஊழியத்திற்கென்று தங்களை அர்ப்பணித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ள ஜெபியுங்கள். அத்துடன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இந்த மாதம் கேரீத் பத்திரிக்கை சற்று தாமதமாக வெளியிடப்படுகிறது. தொடர்ந்து தடையில்லாமல் நமது வாலிபர் பிரிவு ஊழியங்கள் நடைபெற ஜெபித்துக் கொள்ளுங்கள்.
உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யேகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக் கொள்ள உதவும்.
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 